|
CULTURE
NEWS |
 |
|
|
|
|
Interview
|
|
நல்ல இசை ஞானம் உள்ளவன் வாழ்க்கையில் தவறவே முடியது |
கர்நாடக இசைக் கலை என்பது தனித்துவமும், தெய்வீகமும் வாய்ந்தது. அக்கலைக்குள் மெல்லிசை, மேற்கத்தைய இசை என்பவற்றைக் கலப்பது தவறானது என தனது கருத்தினை வலியுறுத்திக் கூறுகிறார். பிரபல இசைக் கலைஞரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான கொல்லங்கலட்டியைச் சேர்ந்த கலாபூஷணம் இசைமணி வ.செல்லத்துரை. இவரை அச்சுவேலியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து வீர கேசரி வாரவெளியீட்டுக்காக நேர் கண்டபோதே அவர் மேற்கண்ட கருத்தினைத் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டின் வடபகுதியில் அமைந்த மருதக்கிராமமான வளமான ஊர் கொல்லங்கலட்டி. வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் வளம் பொருந்திய இவ்வூரில் 25/5/1935 இல் பிறந்தவரான இசைமணி வ. செல்லத்துரையின் தந்தையார் வல்லிபுரம். தாயார் இலட்சுமி அவர் கள். கலைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவரின் சகோதரியும் திறமையான கர்நாடக இசைப் பாடகி ஆவார். இவ்வாறான பாரம்பரியத்தில் பிறந்தவரான இசைமணியை பேட்டி கண்டபோது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் தெரிவித்த பதில்கள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது. .
கேள்வி: நீங்கள் இசைத்துறையில் ஆளுமையுள்ள ஒருவராக இருக்கிறீர்கள். நீங்கள் இசைக்கல்வியை பயின்ற விபரத்தைக் கூற முடியுமா?.
பதில்: நான் ஆரம்பக் கல்வியை யா. கொல்லங்கலட்டி சைவ வித்தியாசாலையிலும் தரம் 7 ஆம் வகுப்பிலிருந்து சிரேஷ்ட கல்வித் தராதரப் பத்திர வகுப்பு வரை யா/மஹாஜனக் கல்லூரியிலும் பயின்று 1958 இல் க.பொ.த. (சா.த) பரீட்சையில் சித்தியெய்தினேன். பாடசாலையில் சங்கீதத்தை ஒரு பாடமாகக் கற்றிருந்தேன். இருப்பினும் இசையின் மேல் இருந்த ஆர்வத்தினால் 1950 ஆம் ஆண்டில் மாவிட்டபுரம் நாதஸ்வர மேதை சோ.உருத்திராபதி அவர்களிடம் கர்நாடக இசை கற்றேன். 1958 ஆம் ஆண்டு வரை அவரைக் குருவாகக் கொண்டு கற்று 1960 ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 4 வருடங்கள் பயின்று இசைமணி பரீட்சையில் முதற் தரத்தில் சித்தியடைந்தேன்..
கேள்வி: பல்கலைக்கழகக் கல்வியைத் தவிர தனிப்பட்ட வகையில் யாரிடமாவது இசையைப் பயின்றிருக்கிறீர்களா?.
பதில்: ஆம் ..இந்தியாவில் இசை கற்ற காலத்தில் இசைப் பேரறிஞர் டி.கே.ரங்காச்சாரியாரிடத்தில் குருசிஷ்ய முறையில் இசை கற்றதோடு இந்தியாவில் அவரோடு சேர்ந்து பல இசைக் கச்சேரிகளிலும் பாடியிருக்கிறேன்..
பண்ணிசையினை ஓதுவார் சுப்பிரமணிய ஐயரிடம் இந்தியாவிலும், யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் ஓதுவார் இராஜசேகரன் அவர்களிடமும் கற்றிருக்கிறேன். 1968,1969 ஆண்டுகளில் எம்.ஏ. கல்யாண கிருஷ்ண பாகவதர் அவர்களிடம் யாழ். நுண்கலைப்பீடத்தில் கற்றிருக்கிறேன்.
கேள்வி: இந்தியாவில் இசைத்துறையில் இசைமணி பட்டம் பெற்று இலங்கைக்கு திரும்பிய பின் முதலில் நடைபெற்ற உங்களுடைய இசை அரங்கேற்றம் பற்றிக் கூறுங்கள்?.
பதில்: இந்தியாவிலிருந்து இசைமணிப்பட்டத்தைப் பெற்று இலங்கைக்கு வந்த பின் மாவிட்டபுரம் முருகன் ஆலயத்தில் தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி அதிபர் ரி.ரி.ஜெயரத்தினம் தலைமையில் மாவிட்டபுரம் முருகன் ஆலயத்தின் ஆதீனக்குருக்கள் வணக்கத்திற்குரிய துரைசுவாமிக் குருக்களின் ஆசியுடன் நிகழ்ந்தது. பக்கவாத்தியங்களாக சோமாஸ் கந்த சர்மா அவர்கள் வயலினும் பேராசிரியர் ஏ.எஸ்.இராமநாதன் மிருதங்கமும் நாச்சிமார்கோயில் ஓ.கணேசன் கெஞ்சிராவும் நாதஸ்வர வித்துவான் ஆறுமுகம்பிள்ளை கடமும் ஜேம்ஸ் முகர்சிங்கும் இசைத்தார்கள். இந்த அரங்கேற்றம் பலரின் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. அந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நன்னாள்..
கேள்வி: கர்நாடக இசையுடன் பண்ணிசையையும் கற்றுள்ள நீங்கள் பண்ணிசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளீர்களா?.
பதில் : ஆம் இந்தியாவில் கற்ற காலத்தில் ஓதுவார் சுப்பிரமணிய ஐயரிடம் பண்ணிசையைக் கற்றேன். பின்பு சென்னை மெய்கண்டார் ஆதீன பண்ணிசை ஓதுவார் இராஜசேகரன் யாழ்ப்பாணத்திற்கு வந்து பண்ணிசை வகுப்புகளை நடாத்தியபோது அவரிடம் பண்ணிசையை முறையாகக் கற்றுள்ளேன். அதோடு அவரோடு சேர்ந்து பண்ணிசைக் கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். இதனை விட நான் பல பண்ணிசை கச்சேரிகளை நடத்தியிருக்கிறேன். சிறப்பாக 1965 ஆம் ஆண்டில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க நான்கு வருடங்கள் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பண்ணிசை வகுப்புகளை நடத்தி பல மாணவர்களை பயிற்றியுள்ளேன். அன்றிலிருந்து இன்றுவரை பண்ணிசையைப் பாடி வருகின்றேன்..
கேள்வி: நீங்கள் பல இசைக் கச்சேரிகளை நடத்தி அழியாப் புகழைச் சம்பாதித்துள்ளீர்கள். நீங்கள் மேடைக்கச்சேரி செய்யும் போது உங்களுக்கென நீங்கள் வைத்துள்ள கச்சேரி அமைப்புப் பற்றிக் கூற முடியுமா?.
பதில்: சுருதியிலும் தாளத்திலும் பிறழ்வு வராது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இராகத்தைப் பாடும் போது ஸ்வர சுத்தத்துடன் அழுத்தமாக இராகச் சாயலை உருக்கமாகப் பாட வேண்டும். இராக ஆலாபனையிலேயே அந்த இராகத்திற்குரிய சகல பாவங்களையும் தனித்தனியே பிரித்து வைத்து இனங்காட்டக்கூடிய நுணுக்கத்தையும் புதிய புதிய கற்பனைகளையும் விஸ்தாரமாகக் கட்டியமைத்துப் பாட வேண்டும். தெலுங்கு சமஸ்கிருத கீர்த்தனைகளோடு தமிழ் கீர்த்தனைகளையும் கலந்து பாட வேண்டும். இவ்வாறு பாடினாற்றான் சாதாரண இரசிகர்கள் மத்தியிலும் மதிப்புப் பெற முடியும். சொற்சுவையைப் பெறக் கூடியதாக நல்ல உச்சரிப்பைக் கொண்டிருக்க வேண்டும்..
கேள்வி: இசை மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டது என்கிறார்கள் இதனைப் பற்றி தங்கள் கருத்து என்ன?.
பதில்:இசை என்பது மனத்தை இசைவிக்கும் தன்மை கொண்டது. இறைவனையே ஏழிசையாய் இசைப்பயனாய் என்று இசை வடிவில் கண்டோம். அந்த இறைவனிடம் இசை நம்மை இசைவிக்கின்றது. நல்ல இசை ஞானம் உள்ளவன் வாழ்க்கையில் தவறவே முடியாது. நல்ல எண்ணத்தோடு நல்லதையே நாடி வாழச் செய்கிறது. பிறந்த குழந்தைக்கு இசை மூலமாகத் தாலாட்டுவதிலிருந்து முதுமையில் மரண பரியந்தம் வரை ஒப்பாரி வடிவிலும் இசை நம்மோடு இணைந்திருப்பதைக் காணலாம். மிருகங்கள் கூட இசைக்குக் கட்டுப்படுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்..
கேள்வி:நீங்கள் இசைக்கலையை மாணவர்களுக்கு கற்பித்துள்ளீர்கள். அது பற்றி விளக்கமாகக் கூற முடியுமா? .
பதில்: இந்தியாவிலிருந்து வந்த காலத்தில் மாவிட்டபுரம் முத்தமிழ் கலாமன்றத்தில் 12 வருடங்கள் இசையைக் கற்பித்தேன். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் கற்பித்தேன். 1977இல் தலவத்துஓயா மகாவித்தியாலயத்திலும், கண்டி இந்து உயர்தர வித்தியாலயத்திலும், கலைமகள் வித்தியாலயத்திலும் இசை ஆசிரியராகக் கற்பித்தேன். 1981,1982 ஆம் ஆண்டில் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று மீண்டும் கண்டியில் 1986 வரை கடமையாற்றினேன். இக்காலத்தில் கண்டி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இசை விரிவுரையாளராக 2 வருடங்கள் கடமையாற்றினேன். யாழ்.கிறிஸ்தவக்கல்லூரி யா/ சோமாஸ்கந்த கல்லூரி, யா/சென்ற் பற்றிக்ஸ், யா/ சென்ஜோன்ஸ், யா/சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, யா/கனகரத்தினம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் வருகை தரு விரிவுரையாளராகக் கடமை புரிந்ததோடு யாழ். பல்கலைக்கழக நுண் கலைப் பீடத்தில் 1996 நவம்பர் மாதத்தில் இருந்து 6 வருடங்கள் இசை விரிவுரையாளராகக் கடமை புரிந்துள்ளேன்..
கேள்வி: உங்களிடம் இசை பயின்ற மாணவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களைப் பற்றி கூறுங்கள்?.
பதில்: என்னிடம் இசை பயின்றவர்கள் பலர் அவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலராக பின்வருபவர்களைக் கூறலாம். திருமதி குலமணி பொன்னுத்துரை, டாக்டர் எஸ். செல்லத்துரை, திருமதி நவமணி, செல்வி. தவமணி, வயலின் வித்துவான் இராதாகிருஷ்ணன், ஐ.ஆ.இ செய்தித் தொகுப்பாளர் நாவரசன், நாதஸ்வர வித்துவான் கேதீஸ்வரன், சங்கீத பூஷணம் செல்வி நாகம்மா கதிர்காமர்.
செல்வி லோஜினி சண்முகநாதன், செல்வி கம்சத்வனி, செல்வி மயூரத்வனி, நுண்கலைப் பீட விரிவுரையாளர்களான சு. றொபேட், கிருஷ்ணானந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம்..
கேள்வி: உங்களுக்குக் கிடைத்த கௌரவ விருதுகளைப் பற்றிக் கூற முடியுமா?.
பதில்: தேவாரத்திருமுறை, ஓதுவார் மணி,கானாமிர்த பூஷணம், கலைஞான கேசரி, இக் கௌரவப்பட்டங்களுடன் 1999 மே மாதத்தில் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் வழங்கிக் கௌரவித்தது..
கேள்வி: இசைத்துறையில் ஈடுபடும் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?.
பதில் : இப்போதைய காலத்தில் இசையைப் பல்கலைக்கழகம் வரை மற்றும் வட இலங்கை சங்கீத சபை ஆசிரிய தரப் பரீட்சை வரையும் பலர் கற்கின்றார்கள். வரவேற்பதற்குரிய விடயமாகும். ஆனால் இவர்களிடம் கேள்வி ஞானத்தை வளர்க்கும் ஆர்வமும் சந்தர்ப்பங்களும் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக இசை நிகழ்ச்சிகள் மிகவும் குறைந்தமையும் வானொலி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் கூட இசைக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இவையும் கேள்வி ஞானத்தைப் பெறுவத்கு வாய்ப்பின்மையை ஏற்படுத்தி வருகிறது..
இசைத்துறையில் கலைஞன் தன்னை வளர்த்துக்கொள்வதற்கு தினமும் குறிப்பிட்ட கால அளவிற்காவது சாதகம் பண்ண வேண்டும். சுயசாதகம் தான் இசையாளனுக்கு கற்பனையிலும் இசை நுணுக்கத்திலும் குரலின் வளமான சஞ்சாரத்திலும் மிகவும் உதவுகிறது. எனவே இசைக் கலைஞர்கள் தினமும் சாதகப்பயிற்சி செய்ய வேண்டும். இசைத் துறையில் கலைஞனின் வளர்ச்சிக்கு இது மிக மிக முக்கியமும் அவசியமுமானது. இதனையே இளைய தலைமுறையினரிடம் வலியுறுத்த விரும்புகின்றேன்..
கேள்வி: சுந்தராம்பாள் அவர்கள் பாடிய "ஞானப்பழத்தை பிழிந்து' எனும் பாடலை இரசிகர்கள் உங்களை விரும்பிப் பாடும்படி கேட்பார்கள். அப்பாடலை அதே ஸ்தாயியில் இந்த வயதிலும் பாட முடிகிறதா?.
பதில்: "ஞானப்பழத்தைப் பிழிந்து' எனும் சுந்தரம்பாளின் பாடலை எனது இளைமைக் காலத்தில் சுந்தராம்பாள் பாடியது போலவே பாடுவேன். அதே சுருதியில் பாடுவேன். அப்பாடல் எனக்கு பெரும் புகழைச் சேர்த்தது. ஆனால் வயது 70ற்கு மேலாகின்ற இன்றைய நிலையில் அதே சுருதியில் பாட இயலாதுவிடினும் இன்றும் கச்சேரிகளில் இரசிகர்களின் விருப்பத்திற்காகப் பாடுகிறேன்..
அப்பாடலை நான் பாடிக்காட்டுமாறு கேட்டபோது மிகவும் உற்சாகமாகப் பாடினார். மிகவும் நன்றாகப் பாடினார். அடக்கமும், பண்பும் மிக்க அவரிடமிருந்து விடைபெறும் போது ஒரு நிறை இருந்தது. அவர் பல்லாண்டு வாழ இறைவனைப் பிராத்தித்து விடைபெற்றேன்.
வீரகேசரி வாரவெளியீடு |
| |
|
|
|
Interview
|
|
உடலும் உணர்வும் பேசும் கலை பரதம் நடன தாரகை செல்வி ரமணி |
செல்வி ரமணி பேசத்தொடங்கினால் தமிழ் அருவி போல் கொட்டுகிறது. ஆடத்தொடங்கினால் திரண்டிருக்கும் கூட்டமே தனை மறந்து தாளம் போடுகிறது.""உடலும் உணர்வும் பேசும் கலை பரதம். அதை ஆடுவதற்கு அலாரிப்பு, ஐதீஸ்வரம், வர்ணம் போன்ற இலக்கண முறைகள் நிறைய உண்டு. பெரும்பாலானவர்களுக்கு அது புரியாது. புரியாத அதை தொடர்ந்து ஆடிக் கொண்டே இருப்பதில் எந்த பலனும் இல்லை. அதனால், எல்லோருக்கும் புரியும் படி தமிழில் இருக்கும் புராண, இதிகாச, வாழ்வியல் விஷயங்களை மையக்கருத்தாக வைத்து தமிழ் நடனம் ஆடுகிறேன். அருணகிரிநாதருடைய "திருப் புகழ்' தான் எங்கள் நாட்டியத்தில் முதன்மையானது'' என்று சொல்லும் "நாட்டியத்தாரகை' ரமணி, திருப்புகழின் பெருமைகளைச் சொல்லும் போது சிலிர்க்கிறார்.
""தொலைக் காட்சிகளில் சில தொடர்கள் ஐந்நூறு நாட்களைத் தாண்டி ஓடுகிறது. அவ்வளவு நாட்களாக அதில் உணர்த்தப்படுவது தனி மனித ஒழுக்கம் என்கிற ஒரே ஒரு வரி விஷயம்தான். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோடு வாழும் மனிதன், பொறாமை பிடித்த மனிதன். மற்றவர்களை வஞ்சிக்கும் மனிதனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அதில் விளக்குகிறார்கள். அவ்வளவு பெரிய விஷயத்தை அருணகிரி நாதர் "அறுகு நுனி ....' என்ற ஒரே ஒரு பாடலில் அற்புதமாய் விளக்கி விடுகிறார்..
"பேசாத வார்த்தைக்கு நீ எஜமான், பேசிய வார்த்தை உனக்கு எஜமான் ஆகிவிடும்' என்பது பொதுவான உண்மை. பல மனிதர்கள் பேசக் கூடாததை பேசிவிட்டு மாட்டிக்கொள்கிறார்கள். தேவையற்றதை பேசாமலே இருப்பதால் ஏற்படும் சந்தோஷத்தை "வசனமிக ஏற்றி மறவாதே...' என்ற பாடலில் அருணகிரிநாதர் அருமையாக விளக்குகிறார்..
இளமைத் துடிப்பின் வேகத்தில் மனிதனிடம் அகந்தை தலைவிரித்து ஆடும். நடுத்தர வயதைக் கடக்கும் போது அவனிடம் ஏற்படும் மன, உடல், மாற்றங்கள் முதுமைக்கு பயந்து அவனிடம் எம பயத்தை உருவாக்கும். ஒரு புறம் சுற்றமும் நட்பும் பிரியும். மறுபுறம் உயிர்ப்பயம் தோன்றும். இந்த இரண்டிற்கும் இடையில் அவன் பரிதவிப்பான். அதை, "தொந்தி சரிய...' என்ற திருப்புகழ் அத்தனை சிறப்பாய் விளக்குகிறது. அதை கேட்கும் மனிதன் நெகிழ்ந்து தன்னை உணர்ந்து திருந்திக்கொள்வான்..
இத்தனை சிறப்புமிக்கவைகளை தமிழில் வைத்துக்கொண்டு வேறு எது எதையோ ஆடிக்கொண்டிருப்பதில் என்ன பயன்?.
அதனால்தான், கட்டுக்கடங்கா சந்தங்களைக் கொண்ட திருப்புகழையும் சரணாகதியைச் சொல்லும் திவ்ய பிரபந்தங்களையும் பன்னிரு திருமுறைகளையும் அருட்பாக்களையும் நாட்டியத்தின் வாயிலாக பரப்பிக் கொண்டிருக்கிறோம்'' என்று சொல்லும் செல்வி ரமணி தனது குழுவினருடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இதுவரை ஐந்தாயிரம் மேடைகளில் நாட்டியமாடியுள்ளார். இவருடைய குழுவில் இடம் பிடித்து பாடும் சிறுவனின் பெயர் சீனிவாச ராகவன்..
மண் பானைக்கு மேல் நின்று ஆடும், "குடக்கூத்து நடனம்', ராஜநாகம் போல் சீறிப் பாய்ந்து ஆடும் "பாம்பு நடனம்' தலையில் செம்புடன் தாம்பாளத்தில் ஏறி நின்று ஜாலங்கள் புரியும் "தாம்பாள நடனம்' போன்றவைகளில் ரமணி அற்புதமாகச் ஜொலிக்கிறார்..
குடத்திற்கு மேல் நின்று ஆடும் குடக்கூத்து நடனமும் தமிழ் இலக்கியங்களில் காணப்படுவது தானா?.
""கிருஷ்ண பகவான் கோகுலத்தில் இந்த நடனம் ஆடியதாக இதிகாசம் குறிப்பிடுகிறது. மணி மேகலை இந்த நடனத்தில் தேர்ச்சி பெற்றிருந்ததாக சிலப்பதிகாரம் சொல்கிறது''.
(கவிழ்த்து வைத்திருக்கும் பானையின் மீது ஏறி, ஜதிக்கு தக்கவாறு மிருதங்கம் மற்றும் சொற்கட்டுக்கு சவால் விடும் விதத்தில் இவர் தில்லானா நடனம் ஆடுகிறார். அறுபது கிலோவிற்கு அதிகமான எடையைக் கொண்ட இவர் ஐந்து கிலோ எடை கொண்ட பானையில் ஏறிநின்று உடலின் மொத்த வலுவையும் கால்களுக்கு கொடுக்காமல் அங்க அசைவுகளை வெளிக்கொணரும் தந்திர நடனமாக இதை ஆடுகிறார். பானைக்கு மேலே நின்று இவர் இருபது நிமிடங்கள் வரை நடனம் ஆடுகிறார்).
பாம்பு நடனத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?.
""இறைவனிடம் போய் நம் உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த நடனத்தை ஆடுகிறேன். குண்டலினி சக்தி நம்மிடம் உறங்கிய நிலையில் இருக்கிறது. அதை தட்டி எழுப்பும் விதத்தில் இந்த நடனத்தை ஆடுவேன். "இறைவா இங்கிருக்கும் அனைவரும் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நானோ உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இங்கிருக்கும் அனைவரும் ஒருசில வினாடிகள் உன் பாதார விந்தத்தை அடையவேண்டும். இந்த புகழ் உன்னை சேர வேண்டும் என்ற உணர்ச்சிப் பிரவாகத்தோடு கடைசியாக ஒரு வட்டம் சுற்றி பாம்புபோல் ஆடுவேன்.
அப்பேõது அங்கிருக்கும் அனைவரின் பாதங்களையும் மானசீகமாகத் தொட்டு இறைவனிடம் கொண்டு போய் சேர்ப்பேன். அப்போது நடனத்தை பார்த்துக்கொண்டிருப்பவர்களில் பலரது கண்களில் இருந்து அவர்களை அறியாமலே கண்ணீர் வந்துவிடும்''.
ரமணிக்கு வயது 32. பெற்றோர் வெங்கடேஸ்வரன் ருக்மணி அம்மாள். ஐந்து பெண்களில் இவர் கடைசியாகப் பிறந்தவர். ஒன்பதாவது வயதில் சர்வாளி ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் பரதம் கற்று சிறு வயதிலே அரங்கேற்றமும் நடத்தியுள்ளார். பாரதி மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கற்றிருக்கிறார். தமிழிசைக் கல்லூரியில் மூன்று வருடங்கள் நடனம் பயின்று ஆடற்கலைவாணி' யாகி இருக்கிறார். பின்பு அதே கல்லூரியில் இரண்டு வருடம் நட்டுவாங்கம் பயின்றுள்ளார். அஞ்சல் வழியில் எம்.எஸ்.சி.யும் கற்றிருக்கிறார். சென்னை அம்பத்தூரில் வசித்துவரும் இவர், "காஞ்சி காமகோடி நாட்டியாலயா' என்ற நாட்டியப் பள்ளியையும் நடத்திவருகிறார்..
முதல் நாட்டிய மேடை அனுபவம் எப்படி இருந்தது?.
""கல்லூரியில் படிக்கும் போது "திருப்புகழில் திருமுருகன் திருவிளையாடல்' நாட்டியத்துக்காக ஆடினேன். அதைப் பார்த்துவிட்டு பல்வேறு கோவில்களில் இருந்து அழைப்பு வந்தது. திருத்தணி கோவில் படி விழாவில் இதுவரை யாரையும் நாட்டியமாட அனுமதிக்கவில்லை. திருப்புகழுக்காக ஆடுவதால் எங்களை அனுமதித்தார்கள்''.
திருப் புகழ் பாடலே புரிவதில்லை என்று பலர் சொல்கிறார்களே?.
""திருப்புகழை மிகச்சிறப்பாக பாடுபவர்களுக்கே அதன் பொருள் புரியாமல் இருக்கிறது. பாட்டு மூலம் புரியாத பொருளை நடனக் காட்சிகள், முக பாவங்கள் மூலம் நன்றாகவே புரிய வைத்து விடலாம்.அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். இப்போது குடும்ப உறவுகளில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. மன நெருக்கடி ஏற்பட்டு நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறவர்களும் அதிகம். அவை அனைத்துக்கும் வாழ்க்கை முறை சரியில்லாமல் இருப்பதே காரணம். அவர்களின் வாழ்க்கை முறைகளைச் சரி செய்யும் சிறந்த கருத்துக்கள் ஆன்மிகம் சார்ந்தவைகளாக தமிழ் பக்தி இலக்கியங்களில் உள்ளன. அவைகளை எடுத்து நாட்டியமாக மக்கள் மனதில் பதிய வைப்பதே எங்கள் நோக்கம்''.
கோபம், எரிச்சல், மன அழுத்தம் போன்றவை இன்று மனிதர்களிடம் அதிகமாக இருக்கிறதே. இதற்கு உங்கள் நாட்டியம் தீர்வு தருமா?.
""நாட்டியம் என்பதே மனிதனின் மன உளைச்சலை குறைக்கும் மருந்து தானே. அதிலும் தமிழ் பக்தி இலக்கியங்களில் உள்ள பாடல்களை மையமாகக் கொண்டு நடத்தும் நாட்டியங்கள் கோபம், எரிச்சல் போன்றவைகளை நிரந்தரமாக போக்க வழிகாட்டுகின்றன. திருப்புகழில் ஒரு பாடல்.
""வசனமிக ஏற்றி மறவாதே
மன துயராற்றில் உழலாதே
இசை பயில சடாக்ஷாம் ஆதலாலே
இகபர சௌபாக்கியம் அருள்வாயே...''
நாம் ஒன்றுபேச அதற்கு எதிர்வாதமாக இன்னொன்று உருவாகும். தான் சொல்வதைத்தான் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறோம். இதுதான் பிரச்சினைகளின் தொடக்கம். அதனால், அந்த நேரத்தில் எதிர்வசனம் பேசாமல் அமைதி காத்தால் பிரச்சினைகள் உருவாகாமலேயே போய் விடும். அந்த நேரத்தை பயனுள்ளதாகவும் ஆக்கலாம். திருப்புகழ் சொல்லும் இந்த கருத்தையும் நாட்டியத்தில் சொல்கிறோம்'' என்று கூறும் செல்வி ரமணி, ராஜ நாக நர்த்தகி உட்பட ஏராளமான பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார். |
| |
|
|
|
|
|
|