Contact us | Make us your homepage | Add to favourites | Home icon Powered by: www.virakesari.lk
CULTURE NEWS
 
Interview
News ID 116
Posted date 6/6/2010
தேசிய விருது வாங்கிய இயக்குனர் பாலா
  தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை இயக்குனர்களில் பாலாவின் இடம் என்பதை யாராலும் எட்டிப்பிடிக்க முடியாது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என்று பாலா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படங்கள் நான்கு தான் என்றாலும் நூறு படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு சமமாக பாலாவை தமிழ்ச் சினிமா கொண்டாடுகிறது. ஒவ்வொரு முறையும் பாலாவின் படம் வெளியாகும் போது இந்த முறை விருது பாலாவுக்குத்தான் என்று தமிழ் சினிமா உலகமும் ரசிகர்களும் பேசிக் கொள்வார்கள். நான்காவது படத்திலும் அது நடந்து விட்டது. அஹம் பிரம்மாஸ்மி என்று அகோரிகளின் ருத்ர தாண்டவத்தை படம் பிடித்துக் காட்டிய "நான் கடவுள்' படத்துக்காக இந்தியாவில் சிறந்த இயக்குனர் விருதை வாங்கிய சூட்டோடு தனது அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாலா. அகோரியாக மிளிர வைத்த ஆர்யாவும்,விஷாலும் இணைந்து நடிக்க கல்பத்தி அகோரம் தயாரிப்பில் பாலாவின் அதிரடி தயாரிப்பும் "அவன் இவன்' திரையில் கலக்கப் போகின்ற அதேவேளை பெற்ற தேசிய விருது பற்றியும் புதிய படம் பற்றியும் புத்துணர்ச்சியுடன் பேசுகிறார் இயக்குனர் பாலா...

* தேசிய விருது கிடைத்ததை எவ்வாறு உணர்கின்றீர்கள்?

என்னை விட பெரிய டைரக்டர்கள் மணிரத்தினம், பாலுமகேந்திரா, பாரதிராஜா, கே. பாலச்சந்தர் போன்றவர்கள் தமிழ் திரையுலகில் இருக்கின்றார்கள். தேசிய விருது எனக்குக் கிடைத்திருப்பது கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கின்றது. அதை பெருமையாகவும் உணர்கின்றேன். என்னை விட அதிக சந்தோஷமடைபவர்கள் இரண்டு பேர் இருக்கின்றார்கள், ஒருவர் என் குரு பாலுமகேந்திரா. இன்னொருவர் அகிலா அம்மாபாலுமகேந்திராவின் மனைவி. அந்த வீட்டில் செல்லப்பிள்ளை நான். மூத்த மகன் நான் தான். அவர்களுடன் ஒன்றாக சாப்பிட்டு வளர்ந்தவன். நான் விருது பெற்றதை இட்டு அந்த வீட்டில் மனதுக்குள் திருவிழா போல் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் என்னை சந்தோஷப்படுத்தியதே பெரிய விருதாக கருதுகிறேன். என் விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். என் கடமையை நிறைவேற்றி விட்டேன் என்ற நிம்மதி எனக்கு. * நான் கடவுள் படம் எடுத்தபோது தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

இல்லை என்னை நம்பி வந்த நடிகர்நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அவர்களுக்கு விருது கிடைக்கவில்லையே என்ற சின்ன வருத்தம் எனக்கு இருக்கிறது.

* தொடர்ந்து இதுபோல் விருதைக் குறி வைத்து படம் எடுப்பீர்களா?

விருதுக்காக மட்டுமே படம் தயாரிக்கவில்லை. பணம் போடுகிற தயாரிப்பாளர்களும் லாபம் அடைய வேண்டும். அதே போல் படத்தில் பங்குகொள்ளும் எல்லோரும் பயனடைய வேண்டும் என்பது தான்

என் குறிக்கோள்.

* ஊனமுற்றவர்களை கதைக் கருவாகக் கொண்ட இந்தப் படத்துக்கு விருது கிடைத்திருப்பதை உங்களுக்குக் கிடைத்த வெற்றியாக கருதுகின்றீர்களா? ஊனம் என்று சொல்லக் கூடாது. மாற்றுத் திறன் என்பது தான் சரியானது. நம்மை விட மாற்றுத் திறன் உடையவர்கள் திறமைசாலிகள், கூர்மையானவர்கள்.

* தேசிய விருதுக்குப் பின் உங்களிடம் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?

நான் நானாக இருக்கப் போகிறேன். எனது திருப்திக்காக என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை திரைக்கதையில் கொண்டு வருவேன். எனக்கு ஒரு கெட்ட பெயர் இருக்கின்றது வருடக்கணக்கில் படம் தயாரிக்கின்றேன் என்கின்றார்கள். அதற்கு யார் காரணம், யார் தப்பு, எந்த பக்கம் என்று விளக்க விருப்பமில்லை. இனிமேல் நான் குறுகிய காலத்தில் படம் எடுத்து முடிப்பேன்

* ரொம்ப அமைதியாக இருக்கின்றீர்களே... உண்மையில் நீங்கள் எப்படிப் பட்ட சுபாவமுடையவர்?

நான் சீரியஸான ஆள் என்று எல்லோரும் நினைக்கின்றார்கள். உண்மையில் நான் தமாஸான ஆள். என்னை மாதிரி கோமாளி யாரும் கிடையாது. * பாத்திரங்களாக்கி தொடர்ந்து படம் எடுக்கின்றீர்களே... ஏன்?

இனிமேல் அப்படி எடுக்கக் கூடாது. இனி இருட்டு ஏரீயாவுக்குப் போகக் கூடாது என்று இளையராஜாவும், பாலுமகேந்திராவும் என்னிடம் சத்தியமே வாங்கி இருக்காங்க. இனிமேல் நான் இயக்கும் படம் சராசரி மனிதர்களைப் பற்றியதாகத் தான் இருக்கும். அவன்இவன் கூட அப்படியான படம் தான்.

* அவன்இவன் என்ன கதை என்று சொல்வீர்களா?

அண்ணன், தம்பி பாசம், காதல் கலந்த கதை. அவனாக விஷால் அண்ணனாகவும், இவனாக ஆரியா தம்பியாகவும் நடிக்கின்றார்கள். என்னுடைய எல்லாப் படங்களிலும் காமெடி இருக்கின்றது. இந்தப் படத்தில் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

* வழக்கமாக பிரபலமாகாத நட்சத்திரங்களை தேர்வு செய்யும் நீங்கள் இதில் விஷால்ஆர்யாவை தேர்வு செய்யக் காரணம் என்ன? கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்கின்றேன். மற்றப்படி புது முகம் என்று பார்ப்பதில்லை. விஷாலும் ஆர்யாவும் நடிப்பது தயாரிப்பாளர்களுக்கு சௌகரியமாக இருக்கிறது. அதனால் அவர்களை வைத்திருக்கிறேன்.

* மற்ற நடிகர், நடிகைகள், கலைஞர்கள்...

இதில் பல விளம்பரப் படங்களில் நடித்த ஜனனி ஐயர் நாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியை தேடிக் கொண்டிருக்கின்றோம். மற்றும் அம்பிகா, ஜெயபிரபா ஆகியோருடனும் இசையமைத்துள்ளார் யுவன். நா.முத்துக்குமார் பாடல்களை எழுத ஆக்கர் வில்சன் ஒலிப்பதிவு செய்துள்ளார். எஸ். ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார். செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை ஆறு மாதங்களுக்குள் வெளியிட முடிவு செய்துள்ளோம். அது ரசிகர்களுக்கு "சப்ரைஸ்'சாக இருக்கும்.
 
Bookmark with : facebook Facebook del.icio.us Delicious diggit Digg stumbleupon StumbleUpon reddit reddit

 

 

Records 1 to 3 of 5
First | Previous | Next | Last
Interview
News ID 57
Posted date 3/13/2010
சிந்தனை, கருத்தினைக் சிதறவிடாமல் விக்கிரத்தை வடிவமைக்க வேண்டும்
  அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பக்கலைஞர், விஸ்வ கலையரசு S.T.M. கண்ணன் ஸ்தபதி அவர்களை எமது சங்கமத்திற்காக சந்தித்த போது மிகவும் சுவாரஸ்யமாக சிற்பக் கலை தொடர்பில் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

* உங்கள் சொந்த இடம் எது? உங்களுக்கு சிற்பத் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?

என்னுடைய சொந்த இடம் திருநெல்வேலி பாளையங்கோட்டை. எனது பரம்பரைத் தொழிலே சிற்பம் செய்வது தான். என் பாட்டன், முப்பாட்டன் இப்படியாக ஆறு தலைமுறைகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 15 வயதில் இருந்தே இத்தொழிலை ஆரம்பித்து விட்டேன்.

* உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்வீர்களா?

எனது தந்தை மாரியப்ப ஸ்தபதி. அவர் சிற்பக் கலையில் மிகவும் பிரசித்தி பெற்றவர். தமிழ் நாட்டின் தலைமை சிற்பி அவர் தான். 1980 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்கான சிற்ப அரங்குகள் முதற் கொண்டு தமிழகத்தில் பல கோயில்களை நிர்மாணித்தவர் எனது தந்தை. எனக்கு இரண்டு சகோதரர்கள். நாங்கள் அனைவருமே இத்தகைய சிற்பக் கலையில் முழுமூச்சாக ஈடுப்பட்டு வருகின்றோம். எனது தந்தை காலமானதையடுத்து நானே இத்தொழிலுக்கு தலைமைத்துவம் வகிக்கின்றேன். இப்போது என் மகன் கூட ஒரு சிற்பியாக இருக்கின்றார். தேசிய அங்கீகாரம் பெற்ற பல தங்கப் பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளேன்.

* இலங்கைக்கு இப்போது எந்த இடத்திற்கு, என்ன விடயமாக வருகை தந்துள்ளீர்கள்?

கொட்டாஞ்சேனை கோவில் ஒன்றை இடித்துக் கட்டுவதற்கான வேலைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கான நிர்மாண வேலைகளை திட்டமிடுவதற்காக கலந்துரையாடல் ஒன்று நடைபெறவிருந்ததால் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளேன்.

இலங்கைக்கான வருகை முதல் தடவையா? இல்லை இதற்கு முன் வந்து நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுள்ளீர்களா?

நான் இருபது வருடங்களாக இலங்கைக்கு வந்து போய்க் கொண்டு இருக்கின்றேன். முதன் முதலாக இலங்கையில் மருதானையில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் சிவாலயத்துக்குரியதான சிவாலயங்கள், சிவபுராணங்கள் அதாவது கண்ணப்ப நாயனார் விக்கிரகங்களான சிவக்குடும்பம், சிவதாண்டவம், திருக்கல்யாணம் என்பனவற்றை நானே நிர்மாணம் செய்தேன். மற்றது 1999 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் நிர்வாகப் பணியையும் நானே செய்துள்ளேன்.அத்தோடு மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் ராஜ கோபுரத்திற்கான வரைபடத்தை தகுந்த சாஸ்திர முறைப்படி தயாரித்திருக்கின்றேன். மற்றது இறம்பொடை ஆஞ்சநேயர் கோயில் நிர்மாண வேலைகளைச் செய்ததும் கூட எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

* ஆலயங்களை அமைப்பதற்கு எவ்வாறான அமைப்புகளை பின் பற்றுகின்றீர்கள் என்பது பற்றிச் சொல்லுங்கள்?

ஆம். கோயிலின் அமைப்புகள் பொதுவாக பேராண்டம், சிற்றாண்டம் அமைப்பின் பின்னணியில் ஒத்ததாகவும் இதில் பேராண்டம் என்பது பிரபஞ்சத்தையும், சிற்றாண்டம் என்பது மனித உடலையும் குறிக்கின்றன. பொதுவாக கோயில் மூலஸ்தானம் தலையாகவும், மூலஸ்தானத்தின் அடுத்த மண்டபம் கழுத்தாகவும், முக மண்டபம் மார்பாகவும், மகா மண்டபம் வயிராகவும், கோபுரம் கால்களாகவும் அமைக்கப்படுகின்றன. கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள சிலை கல்லால் மட்டுமே அமைக்கப்படுகின்றன. ஏனைய சிலைகள் சீமெந்து, மண் போன்றவற்றால் வடிவமைக்கப்படுகின்றன.

* ஆலயங்கள் அமைக்கும் போது சிற்பாகம முறைப்படி அமைக்கப்பட வேண்டும் என்று கூறினீர்கள். அது எவையென்று வரிசைப்படுத்துவீர்களா?

கர்ப்ப கிரகம், அந்த ராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபனா மண்டபம், மணிமண்டபம், அலங்கார மண்டபம், கொடிமர மண்டபம், ஏனைய பிரமுகர்கள், பரிவார மூர்த்திகள் இந்த முறைப்படி அமைப்பது தான் ஆலயம்.

* ஒரு சிற்பியானவர் முக்கியமாக தெரிந்திருக்க வேண்டியவை எவை?

கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, ஜோதிடக் கலை, வாஸ்து சாஸ்திரம் இவை யாவும் முறையாக அறிந்திருந்தால் மட்டுமே சிற்பி என்று பெயர். ஓர் ஆலயத்தை நிர்மாணித்தலின் போது இவற்றையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது கட்டப்படும் ஆலயம் எந்தத் தெய்வத்திற்குரியது, அந்த தெய்வத்தின் பெயர், ஊர், எஜமான், சமுதாய, ஜோதிடப் பொருத்தங்கள் அதாவது 16 பொருத்தங்கள் பார்த்து வாஸ்து பூஜை செய்த பின்பே சிலைகளை வடிவமைக்க வேண்டும்.

* ஒரு கல்லைக் கொண்டு சிற்பம் செதுக்க முன் சிற்பி ஒருவரின் உணர்வு எப்படி இருக்க வேண்டும்?

சிற்பியாகப்பட்டவர் விரதம் இருந்து நல்ல நாள், கிழமை, திதி பார்த்து சிலை வடிக்கும் கல்லுக்கு பூஜை செய்து அந்தக் கல்லை சிறப்பு காவி கொண்டு வரைதல் வேண்டும். பின் உளி, சுத்தியல் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி சிந்தனை, கருத்து சிதற விடாமல் எந்த தேவதையை வடிக்கிறோமோ அந்த தேவதையை மனதில் நிறுத்தி முக்கிய தாள பிரமாணத்தின்படி விக்கிரகத்தினை வடிவமைத்தல் வேண்டும். * ஒரு சிலையை வடித்த பிறகு அதற்கான உயிரோட்டத்தை எவ்வாறு கொடுக்கின்றீர்கள்? அது யாரால் கொடுக்கப்படுகிறது?

ஆம். இது நல்ல கேள்வி. கல்லை செதுக்கி சிலையாக வடித்து ஆலயத்தில் ஒப்படைத்த பின் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக கண் திறப்பு நிகழ்ச்சி ஒன்று சிற்பியினாலேயே நடத்தப்படுகின்றது. அது கல்லுக்கு உயிர் வரக் கூடிய நேரம் என்று சால்லப்படுகின்றது.

இதை தங்க ஊசி, வெள்ளி ஊசி கொண்டு கண், செவி, நாசி, வாய், மார்பகம், நாலி, ஸ்தண்ணியம் போன்ற மந்திர பூர்வமாக தங்க, வெள்ளி ஊசி கொண்டு திறக்கின்றவர்களாகிய சிற்பிகள் நாங்களே. பின் தீபாராதனை செய்து விக்கிரகங்களை கருவறையிலிருத்தி அஷ்டபந்தன மருந்துகளைச் சாற்றி முதல் பூசை சிற்பியின் மூலமே செய்யப்பட்ட பின் ஆச்சாரியார்கள் பூசை நடைபெறும்.

* 20 வருடங்களின் பின் உங்கள் இலங்கை அனுபவம் எப்படி இருக்கின்றது?

இலங்கை மிகவும் கலைத்துவமிக்க நாடு. எனக்கு மிகவும் பிடிக்கும்.கடந்த காலங்களில் சூழ்நிலை மோசமாக இருந்தமையால் நானும் எனது குழுவினரும் இலங்கைக்கு பயந்து பயந்து வந்தோம். இப்போது அந்தப் பயம் இல்லை என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. அதற்கு இந்த நாட்டு ஜனாதிபதிக்கு முதலில் நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இலங்கையில் எல்லா இடங்களிலும் என்னுடைய ஆலய நிர்வாகப் பணிகளைச் செய்ய விரும்புகிறேன்.

* இறுதியாக ஒரு கேள்வி ஏன் இந்தப் பத்திரிகைக்கு இவ்வாறு செவ்வியொன்றை அளிக்க விரும்பினீர்கள்?

வீரகேசரி என்பது ஓர் உலக பத்திரிகை. அண்மையில் சிங்கப்பூர் போகும் போது விமானத்தில் கூட இப் பத்திரிகை காணப்பட்டது. எனவே இப் பத்திரிகையில் எப்படியாவது என்னையும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் அவா. இப் பத்திரிகை மேலும் சிறப்பு பெற வாழ்த்துவதுடன் இந்தச் சந்தர்ப்பத்தை அளித்த வீரகேசரி சங்கமம் ஆசிரியருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Bookmark with : facebook Facebook del.icio.us Delicious diggit Digg stumbleupon StumbleUpon reddit reddit

 

 

Records 1 to 3 of 5
First | Previous | Next | Last
Interview
News ID 40
Posted date 3/10/2010
சிவராத்திரி தொடர்பில் முரண்பாடுகள் வேண்டாம்-திருக்கேதீஸ்வர திருப்பணிச் சபை தலைவர் கலைக்கேசரிக்கு வழங்கிய விசேட நேர்காணல்
  மகா சிவராத்திரி தினம் சம்பந்தமாக பஞ்சாங்க கணிப்பாளர்களின் தவறான கணிப்பினால் விரதம் காக்கும் சைவ மக்கள் தடுமாற்றத்திற்கு உள்ளானபோதும் காலாகாலம் தொட்டு நடைமுறையில் இருப்பதையே கடைப்பிடிக்கின்றோம். நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் மன்னார் மாவட்டத்தின் பாடல் தலமான திருக்கேதீஸ்வரத்துக்கு வரும் பாதைகள் எல்லாம் திறந்திருப்பதால் சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபையின் இணைச் செயலாளரும் சுமார் 47 வருடங்களாக இவ் ஆலய திருதொண்டராகவும் இருந்து வரும் புலவர் ஜயா என்று அழைக்கப்படும் புலவர் அ.திருநாவக்கரசு ஜே.பி அவர்களை நேர்காணல் கண்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

1990 ம் ஆண்டுக்குமுன் மகா சிவராத்திரியென்றால் பாடல் தலமான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம் களைகட்டி காணப்படும். இப்பொழுது பாதைகள் திறக்கப்பட்டு ஓரளவு மக்கள் சுதந்திரமாக வந்து செல்லும் நிலை உருவாகியுள்ளதால் பெருந்தொகையான மக்கள் இவ் ஆலயம் நோக்கி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே இதுவிடயமாக புலவர் ஜயாவை நேர்காணல் கண்டேன்.

கேள்வி :- ஜயா அவர்களே மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகினதே இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- மகா சிவராத்திரி பெருவிழா மாசிமாதம் நடைபெறுவது காலாகாலம் தொட்டு நடைமுறையில் உள்ளது என்பது சைவ உலகம் நன்கு அறியும். ஒரு சில பஞ்சாங்ககணிப்பாளர்களின் தவறான கணிப்பினால் விரதம் காக்கும் சைவ மக்கள் தடுமாற்றத்திற்கு உள்ளானார்கள் என்பதை காணக்கூடியதாக இருந்தது. இவர்களின் இந்த குளறுபடியினால் மக்களையும் குளறுபடிக்கும் உள்ளாகியதையிட்டு மிகுந்த வேதனை அடைகின்றோம்.

கேள்வி:- இவ் தினத்தை முன்னிட்டு ஏற்பட்ட கருத்துக்கள் எவ்வாறு சீர்செய்யப்பட்டுள்ளது?

பதில்:- திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரிவிழா நிர்ணயத்தை சீர்பார்த்து தனது ஆண்டின் நிகழ்ச்சி நிரலை ஏலவே குறித்த 13.3.2010 என்பதை திட்டவட்டமாக வெளிபடுத்தியதுமல்லாமல் இதுவிடயமாக இந்து கலாச்சார அமைச்சுக்கும் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

கேள்வி:- உங்கள் திருப்பணிச்சபை முன்வைத்த இக் கருத்தை விரதம் காக்கும் சைவ அடிகளார்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று நினைக்கின்றீர்களா?

பதில்:- மகா சிவராத்திரி விழா என்றால் உலகிலுள்ள விரதம் காக்கும் சைவ அடியாளர்களுக்கு நன்கு தெரியும் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபையின் தீர்மானத்துக்கு ஏற்பவே இவ் விழா நடைபெறுகின்றது என்று.

கேள்வி:- இவ் விழாவுக்கு இலங்கையின் நாலாபக்கங்களிலிருந்தும் பெருந்தொகையான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வளவு பேர் வருவார்கள் என எதிர்பார்க்கின்றீர்கள் அத்துடன் இவர்களுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றதா?

பதில்:- இம்முறை இவ் விழாவுக்கு பல்லாயிரக்கணக்கான அதாவது மூன்று லட்சத்திற்கும் நான்கு லட்சத்திற்கும் உட்பட்ட பக்தர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அத்துடன் சிவராத்திரி விழாவுக்கு ஆண்டுதோறும் வழமையாக முன்னெடுத்துச்செல்லும் ஏற்பாடுகள் அனைத்தும் விரைந்து செயல்படுத்தப்படுகின்றது. விழாவுக்கு பல்லாயிரக்கணக்கான அடியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து அதற்கான குடிநீர்,உணவு, தங்குமிடவசதிகள், போக்குவரத்துக்கள், மின்னொளி,மருத்துவம் போன்ற சகல வசதிகளும் பெரும் எடுப்பில் செயல்படுத்தப்படுகின்றது.

நான் குறிப்பாக சொல்வதென்றால் இந்த ஏற்பாடுகளுக்கு இலங்கை அரசு முழுமனதுடன் பல ஒத்தாசைகளை புரிந்து வருகின்றது. இந்த அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற பல மறுசீரமைப்பு பணிகள் திணைக்களங்கள், ஒப்பந்தக்காரர்கள் கொண்டு காற்றின் வேகத்தைக் காட்டிலும் துரிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இன்னும் குறிப்பாக சொன்னால் திருக்கேதீஸ்வரத்தில் குறுகிய போக்குவரத்துச்சாலைகள் பெருஞ்சாலைகளாக அமைக்கப்படுகின்றது. ஏ32 வீதி கொங்கிறீற் வீதியாக மாற்றப்படுகின்றது. பாலாவி தீர்த்த திருக்குளம் சூழ்ந்திருந்த காடுகள் அணைத்தும் அழிக்கப்பட்டு புதிய வீதிகள் உருவாக்கப்பட்டு தீர்த்த குளத்தினுள் இருந்த புற்கள் அகற்றி அணைக்கட்டுக்களை வீதியாக அமைத்து செப்பனிடப்படுகின்றது. அத்துடன் இவ் ஆலய வரலாற்று புகழ்மிக்க தர்ப்பைக்குளம் சீராக வடிவமைக்கப்பட்டு படிகள் கட்டப்பட்டு அடிகளார்கள் இன்பமாக தீர்த்தமாடுவதற்கேற்றவாறு அமைக்கப்படுகின்றது

மேலும் ஆலயத்தின் உள் வீதி தேர் ஓடும் வீதி இவை அணைத்திற்கும் இரு புறமும் நடைபாதைகள் அமைத்து மைய பகுதியில் தேர் ஓடுவதற்கும் சுவாமி வீதி வலம் வருவதற்கும் அடிகளார் ;;பிரதிட்டை செய்வதற்கும் ஏற்றவாறு வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்துடன் இறுதிக்கடன் செய்வதற்குறிய மண்டபம் எரியூட்டும் இடம் போன்றவைகளும் அமைக்கப்படுகின்றன. இவற்றுடன் பெண்களுக்கென உடை மாற்றுவதற்கு தனியான மண்டபம் மறுசீரமைக்கப்பட்டு மிகுதியான கழிவறைகள் அமைக்கப்படுவதுடன் கட்டணம் செலுத்தி பாவிக்கும் தனியான கழிவறைகளும் அமைக்கப்படுகின்றன.

அரசின் பணிப்பின்பேரில் வடமாகாண ஆளுனர் செயலாளர் என திணைக்கள தலைவர்களும் முகாமிட்டு மிகுந்த அக்கநையோடு பணியாற்றி வருகின்றனர். வாரம் இரண்டு மூன்று முறை ஆளுனர் அல்லது செயலாளர் இங்கு நேரடியாக வந்து கண்காணிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

கேள்வி:- மகா சிவராத்திரி அன்று எவ்வாறான சமய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என கூறமுடியுமா?

பதில் :- வழமைபோல ஆறு கால பூஜைகளும் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாலு கால பூஜைகளும் சிறப்பாக நடாத்துவதற்கு திருப்பணிச்சபையினர் அணைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர். அத்துடன் வழமை போன்று வசந்த மண்டபத்தில் சமய சொற்பொழிவு மங்கள வாhத்;திசைகளும் திருமுறை பண்ணிசை ;நிகழ்ச்சிகளும் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தத்தில் திரண்டு வருகின்ற அடியாளர்களின் தொகைக்கேற்றவாறு தங்குமிட வசதிகள் இல்லாதவிடத்தும் இருக்கின்ற மடங்களை கொண்டு இயன்றளவு கொட்டகைகளும் அமைத்து அடியாளர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்துடன் தாக சாந்திக்கு குடி நீர் திருவமுது ஏனைய அவசிய தேவைகள் அணைத்தும் குறைவின்றி செய்வதற்கு சபை அணைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்கின்றன.

கேள்வி :- புலவர் ஜயா அவர்களே பாலாவில் நீர் மட்டம் மிக குறைவாக இருக்கின்றதே இது அடியாளர்கள் தீர்த்தம் ஆடுவதற்கு ஏற்றவாறு இல்லையே இதுபற்றி….

பதில் :- பாலாவில் நீர் மட்டம் மிக குறைவாக இருப்பது உண்மைதான். இது விடயமாக மத்திய அரசின் அணுசசரையுடன் பாலாவி நீரை பெருக்குவதற்கு நீர்பாசன இலாகாவிடம் உதவி கோரியுள்ளோம். அதாவது மன்னார் கட்டுக்கரைக்குளத்திலிருந்து பாலாவிக்கு வருகின்ற சிதைந்திருக்கின்ற வாயக்;கால்களை துப்பரவு செய்து கட்டுக்கரைக்குளத்திலிருந்து பாலாவிக்கு நீரை கொண்டு வந்து ஏற்ற நடவடிக்கையை கோரியுள்ளோம். இதுவும் நிறைவேறும் எனவும் நம்புகின்றோம்.

கேள்வி :- ஈற்றில் ஒரு கேள்வி 1990ம் ஆண்டுக்குமுன் இங்கு வந்த பக்தர்கள் சுதந்திரமாக இறைவழிபட்டு தங்கள் மனச்சுமைகளை இறக்கிவிட்டு சென்றதைபோன்று இப்பொழுது இங்கு வரும் பக்தர்கள் திருப்தி கொள்கின்றனரா?

பதில் :- யாராக இருந்தாலும் ஒரு அமைதியான சூழலில் வழிபடும்போது அதில் இன்பம் காண்கின்றனர். இதுதான் உண்மையும் கூட. இந்நிலை முன்பு இப்பகுதியில் இருந்தது. ஆனால் இவ் ஆலயத்துக்கு சொற்ப தூரத்தில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டு அங்கு காலை மாலையில் இடம்பெறும் ஒலி பெருக்கியின் சத்தத்தால் வழிபடும்போது முன்பு இங்கு இருந்த அமைதி இப்பொழுது இல்லையென இங்கு வந்துசெல்லும் பக்தர்கள் முறையிடுவதையும் கேற்கக்கூடியதாக இருக்கின்றன. பக்தர்கள் கூறும் இவ் குறைபாடுகளை தவிர வேறு குறைபாடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

 
Bookmark with : facebook Facebook del.icio.us Delicious diggit Digg stumbleupon StumbleUpon reddit reddit

 

 

Records 1 to 3 of 5
First | Previous | Next | Last
 
  © Powered by Express Online. All Rights Reserved    
Home