|
|
 |
|
|
|
|
| மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா
|
மேல்மருவத்தூரில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா மிகுந்த உற்சாகத்துடன் ஒருவார விழாவாக கொண்டாடப்பட்டது. அவரது 70வது பிறந்தநாளாகிய இன்று அவரை அலங்கரிக்கப்பட்ட மலர் அலங்கார ரதத்தில் பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். விழா சிறப்பு மலரை வெளியிட்டு அருள்தரிசனம் தந்த அடிகளாரிடம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அருளாசி பெற்றனர்.
பிப்ரவரி 13 முதல் 15 தேதிவரை நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் 5000 பேருக்கு மேல் பங்கேற்று சிகிச்சை பெற்ற மக்கள் நலப் பணியுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. பிப்ரவரி 25 முதல் தொடர் அன்னதானம், கலச வேள்வி பூசை, சிறப்பு பாத பூசைகள், தினசரி பல்வேறு சிறப்பு கலைநிகழ்ச்சிகள், தங்கரதத்தில் வரவேற்பு, ரூ.1கோடி மதிப்பிலான மக்கள் நலப்பணிகள், வானத்தில் வண்ணக் கதிரொளிக் காட்சிகள் என தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .
இன்று காலை அவரது தாய் தந்தையர் படங்களுக்கு அடிகளார் மாலையிட்டு, பொட்டிட்டு தீபாராதனை காட்டி வணங்கினார். பின்னர் இல்லத்திலிருந்து காலை சித்தர் பீடம் புறப்பட்ட அடிகளாரை அவரது செவ்வாடை பக்தர்கள் மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். .
சித்தர் பீடத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க பாதபூசை செய்து அழகுற வரவேற்றனர். சித்தர் பீட பிரகாரத்தை வலம் வந்த அடிகளார் கருவறையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டியபின், புற்று மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த அருள்தரிசன மேடைக்கு வந்தார்..
அங்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பில் பொன்னாடை, மாலை, மலர்கிரீடம் அணிவித்து மரியாதை செய்தனர். அங்கே வைக்கப்பட்டிருந்த பிறந்த நாள் கேக்கை வெட்டி அங்கிருந்த குழந்தைகளுக்கு அடிகளார் வழங்கினார். .
பின்னர் அருளாசி மேடையில் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை அடிகளார் வெளியிட தமிழக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எம். தணிகாசலம் முதலியோர் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து அங்கு காத்துக் கொண்டிருந்த பல்துறைப் பிரமுகர்களும், அரசு உயர் அதிகாரிகளும் ஆசி பெற்றனர்..
பின்னர் பக்தர்களுக்கு அடிகளார் வழங்கும் அருள்தரிசனம் 9.30 மணிக்கு துவங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தொடர்ந்து வந்து அடிகளாரின் அருள்தரிசனமும் அருளாசியும் பெற்றுச் சென்றனர். வரிசையில் வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இயக்கத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அமைப்புகள் சார்பாக மோர், ஐஸ்கிரீம், தண்ணீர், டீ, குழந்தைகளுக்கு பால், பழங்கள் முதலியன வழங்கப்பட்டன. |
|
Advertisments
|
|
|
|
|
|
|