Home >> MUSIC
மருதமலை மாமணியே முருகையா: மதுரை எஸ். சோமசுந்தரம்
15-12-2011,
VIEWS :1799
PRINT EMAIL

அறிவனார், சிகண்டியார், செயிற்றியனார் என்று தமிழிசை நுணுக்கங்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈந்த சங்கப் புலவர்களின் தங்கத்தொனி சாகாவரம் பெற்று, அவனி முழுவதும் பவனி வருகின்றது. பண்ணோடமைந்ததே பாட்டு என்பது இலக்கண வித்தகர்களின் கூற்று. ஆயகலைகள் அறுபத்து நான்கிலும், கவினுறு கலைகள் யாவும் குரு சிஷ்ய முறையிலே வளர்ந்து மிளிர்ந்தன என்பதைக் காப்பியங்கள் காவியங்கள் மூலமாகவும் வேறு வழிகளிலும் அறிகிறோம்.

‘குரு இன்றி எவ்வித்தையும் திருப்பெறாது’ என்பர். இசைக்கலை இதற்கு விதிவிலக்கல்ல. 40 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புகழ்பெற்ற இசை மேதை காஞ்சிவரம் நயினாப்பிள்ளை அவர்களின் நாமம் மிக பிரசித்தமானது. மேடையில் அமர்ந்து ஒரு பாடகர் இசைக்கச்சேரி செய்யும்போது இவர் சுருதி, ஸ்வரம், இராகம், தாளம், பாவம் எப்படி என்பதை ஆராய்ந்தபடியே இரசிப்பார்.

அத்தனையும் மொத்தமாக நயினாப்பிள்ளை அவர்களிடம் அமைந்திருந்தது. இசையார்வம்மிக்க இளைஞன் சித்தூர் சுப்பிரமணியபிள்ளை இவரிடம் குரு சிஷ்ய முறையில் இசைபயின்று வித்துவான் நிலையை அடைந்தார்.

48 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைப்பேராசிரியராயும், யாழிலும் கடமையாற்றியவர். மிகச் சுத்தமாகவும் தெளிவாகவும் பாட வல்லவர். எம் நாட்டு பல இசை ஆசிரியர்களையும் உருவாக்கி புகழ்பெற்றவர். இந்த இசை மேதையிடம் குருசிஷ்ய பரம்பரையில் வந்த வித்துவானே ‘மருதமலை’யைத் தந்த மதுரகான வேலன். கவின் கலைகள் பயிலும் மாணவர்களுக்கு இத்தகைய மேதைகளின் ஆற்றல்கள் வழிகாட்டுமென்று எண்ணியே நினைவுத்திரையில் மீட்க நேர்ந்தது.

முடிசூடா மன்னனாக இசை உலகில் வலம் வந்த மதுரை எஸ். சோமசுந்தரம் அவர்களே தேவரின்  உலகம் காக்கும் வேலையா.. என்று உருகிய பெரும் வித்துவான் ஆவார். அக் காலத்தில் மும்மூர்த்திகளுடைய தெலுங்கு, சமஸ்கிருதம், தமிழ் பாடல்கள் கச்சேரிகளில் ஒலிக்கும். தெலுங்கு கூடுதல் இடத்தை பிடிக்கும்.

மதுரையில் நல்ல இசைச்சூழலில் பிறந்து வளர்ந்த சோமசுந்தரம் அவர்களுக்கு இசையே சிறுவயது முதல் வசமாகியது. பத்து வயதுப் பாலகனாய் இருக்கும் போதே தொடையில் தாளம் போட்டு பாடி ஆச்சரியப்பட வைத்த மேதை உள்ளூர் நாதஸ்வர, இசை வித்துவான்களிடம் கற்றதை வைத்து, அசுர பயிற்சியால் நல்ல குரல் வளம் பெற்று இளம் வித்துவானாகப் புகழ் பெற்றவர்.

இவரது விடிகாலைப் பயிற்சியையும் இசைத் துடிப்பையும் மேலும் வளர்க்க மகா வித்துவான் சித்தூர் சுப்பிரமணியபிள்ளை அவர்களிடம் குரு சிஷ்ய முறையில் வாழ்ந்து இசை பயில அனுப்பினர். ஏற்கனவே, பல்லவியிலும் கற்பனாஸ்வரப் பிரயோக முறையிலும் தாளக் கட்டுபாட்டிலும் பிரசித்திபெற்ற குருவிடமிருந்து சகலதையும் மிகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட சோமு, அக்கால வித்தவான்களைப் பின் தள்ளும் அளவிற்கு முன்னேறினார்.

இவரே சிறந்த சீடன் என உணர்ந்த குரு மனம் வைத்துப் பாடங்களையும் மெருகூட்டி தன் உடன்பாடும் வாய்ப்பையும் ஏற்படுத்தியது இவருக்கு பெரும்பேறு ஆயிற்று. டில்லி வரை கச்சேரி வாய்ப்பும் வந்தன. அகில இந்திய வானொலியில் சம்மேளனக் கச்சேரியும் சபா கச்சேரிகளும், இவரில்லத்தைத் தட்டின.

ஊடகங்கள் இவரது படத்தைப் போட்டு பக்கங்களை நிரப்பின. அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர் ஆகும் வாய்ப்பும் கிட்டியது எமது நாட்டு மாணவ செல்வங்களுக்கு ஒரு வரப்பிரசாதமே. தமிழிசைத் தாகம் கொண்டவர்களுக்குக் கேட்கவா வேண்டும்?  மாரி மழை போல் தமிழ் இசையை வாரி வழங்கினார்.

மதுரைச் சபாவில் மாபெரும் கச்சேரிக்கு ஏற்பாடு இரசிக வெள்ளம் உள்ளங்கனிய இன்பமெல்லாம் தருவாயே சுந்தரனாம் சோமசுந்தரன் இங்கிருக்கீ என்று தன்யாசி இராகத்தில் உருகிப்பாட ஆரம்பித்ததும் ஒரே நிசப்தம். மதுரை சோமசுந்தரப் பெருமானை எண்ணி வித்துவான் சோமு தன்னையும் இணைத்தாரே என்று உருகியவாறு கண்ணீரைத் துடைத்தனர். இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்கள்.

வருடாவருடம் திருவையாறு இசை உற்சவத்தில் இவர் நிகழ்வு தவறாது இருக்கும். வழமை போன்று விசேட கச்சேரிகளில் குன்னக்குடி வைத்திய நாத ஐயரின் வயலின் பக்கவாத்தியமாக அமையும். தெலுங்குப் பண்டிதர்களிடம் பாடல்களின் கருத்துக்குப் பொருத்தமாகப் பிரித்து இசைகூட்டிக் கீர்த்தனைகளைப் பாடும் முறை சகலரையும் பிரமித்து மகிழ வைக்கும்.

தமிழிசைச் சங்கத்திலும் இவரது மார்கழிக் கச்சேரி நிச்சயம் தவறாது கருத்தாழமுள்ள உருப்படிகள் தேனாய்ப் பாயும். ஈற்றில் இராக மாலிகையில் அமைந்த நாட்டைக் குறிஞ்சியில் என்னும் பாடலும் மாடு மேய்க்கும் கண்ணா என்ற தேஷ் இராகப் பாடலும் தவறாது இடம் பெறும். கடின பயிற்சியின் போறாக திரிஸ்தாயி சஞ்சாரம் செய்ய குரல் வளம் இடம்தந்தது.

பல்லவி பாடும் போது சபை நிசப்தமாகும். ஏன்? இராக ஆலாபனை, தாளம் பாடும் வேகம், பல்லவி திரி காலப்பகுதியும், திஸ்ர அமைப்பு, கற்பனாஸ்வரம், குறைப்பு, தீர்மானம், இராக மாலிகையில் ஸ்வரப் பிரஸ்த்தாரம், தாளத்தின் அமைப்பு எல்லாம் அரைமணி நேரம்போவதே தெரியாது மெய் மறக்க வைக்கும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சூழல் தமிழிசை மேலும் வளர மதுரை சோமு அவர்களுக்கு மாபெரும் உந்து சக்தியானது. வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் இவரது உற்ற நண்பராகையால் அவரது இசை அமைப்பில் உருவானதே மருத மலை மாமணி என்ற பாடலாகும். முருகன் பெருமையை உணர்த்தும் கந்தன் கருணை கைகொடுத்தது. திரைப்படத்தில் இவரது பாடல் இடம்பெற வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசையும் தயாரிப்பாளர் சிந்தனையில் உதித்தது.

குன்னக்குடி மேதையின் இசை அமைப்பில் அவரே பக்கவாத்தியமாக முருகன் பெருமை கூறும் மருதமலை உதித்தது. கருத்திற்கு பொருத்தமான சொல்லடுக்கு, இசை காட்சியமைப்பு எல்லாம் முருகன் சந்நிதியையே முன்னிறுத்தி, பக்தி நிலையை உருவாக்கியது.

அத்தனைக்கும் மேலாக, வழமையான திரை இசைபோல் அல்லாமல், சாஸ்திரீய இசை அமைப்புடன், விறுவிறுப்பாகவும் நெகிழ வைக்கும் முறையில், இராகத்தை கையாண்டு இசைத்தர்பாரோ என வியக்க, தர்பாரி கானடாவை பல்வித நெளிவு சுளிவுடன் வெளிக்கொண்டு வந்தது அவரது ஆற்றலை முழு உலகமும் புகழ்ந்தது. 

இந்துஸ்தானி இசை வித்துவான்கள், பிர்க்கா, கமகம் வைப்பதில் பிரபல்யம் மிக்கவர்கள். அவர்களே இவரது திரிஸ்தாயி சஞ்சாரத்தை மேல்ஸ்தாயியிலேயே பிர்க்கா வைத்துப் பாடியதையும் புகழ்ந்தனர் . அவரது கடின பயிற்சி,  குருவின் ஆசீர்வாதம், மக்கள் ஆதரவு ஆகியவையே என்னைப் பாடவைத்தது என்று விகடன் பேட்டியில் கூறி மகிழ்ந்தார். அவரது இறுவட்டு, ஒலிநாடா சாகாவரம் பெற்றவை. இசை ஆர்வலர்கள் காதாரக் கேட்டால், இசை பற்றிய நுணுக்கங்கள் அத்தனையும் புரியும். மதுரை சோமசுந்தரம் அவர்கள் ஏராளமான சீடர்களைப் போஷித்து வளர்த்தார்கள். கழுகுமலை கந்தசாமி அவர்களும் சீடர்களில் ஒரவரே.

 

PRINT EMAIL
 
தொடர்ந்து இக்கட்டுரையை முழுமையாக படிப்பதற்கு... கலைக்கேசரி மாதாந்த சஞ்சிகையைத் தபால் மூலமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெற்றுக் கொள்ள கீழ்வரும் link ஐ கிளிக் செய்து இன்றே பதிவு செய்து உங்கள் சந்தாவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
POST YOUR COMMENTS
 
இம்மாத இதழில்...
PHOTO GALLERY
 
SUBSCRIBE TO KALAIKESARI
KALAIKESARI ARTICLES
OUR NEWSLETTER
Name
Email
 
VIDEO
தொல்லியல்
மண்ணின் மரபு
வழிபாட்டு மரபு
சிற்பக்கலை
இராமாயணம்
 
சாசனம்
அழகியல்
வாழ்வியல்
நடனக்கலை
ஆளுமை
 
இசைக்கலை
கட்டடக்கலை
அட்டைப்படக்கட்டுரை
நினைவுத்திரை
கோளியல்
 
     
     
     
© 2013 Copyright Express Newspapers (Pvt) Ltd. All rights reserved.
Developed By : Newssmart